ரூபாய் நாணயத்தில் சர்ச்சைக்குரிய வரைபடத்தை நீக்கியது நேபாள அரசு!
நேபாள அரசு புதிதாக வெளியிட்டுள்ள ஒரு ரூபாய் நாணயத்தில் செய்துள்ள வடிவமைப்பு மாற்றம், சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இது இந்தியாவுடனான நல்லுறவை மீண்டும் பலப்படுத்துவதற்கான நேபாளத்தின் முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் முன்பு ஆட்சி செய்த அரசுகள், எல்லைப் விவகாரத்தில் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தன. இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லிபுலேக், காலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகிய பகுதிகளைத் தங்களுக்குச் சொந்தமானது என நேபாளம் உரிமை கோரியது.
அந்தப் பகுதிகளைத் தங்களின் நிலப்பரப்பாகச் சேர்த்து 2020-ஆம் ஆண்டில் புதிய தேசிய வரைபடத்தை வெளியிட்ட நேபாள அரசு, அதனைத் தங்களின் நாணயங்களிலும் அச்சிட்டு வெளியிட்டு வந்தது.
நேபாளத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த அரசியல் மாற்றங்களால், ராப் பாடகர் பாலேந்திர ஷா தலைமையிலான தேசிய சுதந்திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. பிரதமராகப் பொறுப்பேற்றது முதல் அவர் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ஒரு ரூபாய் நாணயத்தில் இருந்து சர்ச்சைக்குரிய அந்த எல்லை வரைபடம் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. வரைபடத்திற்குப் பதிலாக, நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'லோ க்யாகர்' மடாலயத்தின் படம் புதிய நாணயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் இரண்டு ரூபாய் நாணயத்தில் இன்னும் பழைய வரைபடமே நீடிக்கிறது. இது உள்நாட்டில் எழும் தேசியவாத எதிர்ப்புகளைச் சமாளித்து, அதே நேரத்தில் இந்தியாவிடம் இணக்கமான போக்கைக் கையாள நேபாள அரசு மேற்கொண்ட ஒரு நுட்பமான முயற்சியாகக் கருதப்படுகிறது.