உருக்குலைந்த நேபாள்.. மீட்பு பணிகளில் 11,000 பேர் தீவிரம் - மீண்டும் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை... புதிய ஏரி உடையும் அபாயம்!

 

திபெத்தில் ஏரி உடைந்ததால் நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் நீடித்துவரும் நிலையில், தற்போது மீண்டும் புதிய ஏரி ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று சீனா எச்சரித்துள்ளது.

கோஷி ஆற்றின் மேற்பகுதியில் திபெத்தில் புதிதாக உருவாகியுள்ள தற்காலிக ஏரியில் 24 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கி நிரம்பி வழிந்து வருவதால், அது எந்த நேரத்திலும் உடையும் அபாயம் உள்ளதாகச் சீனா எச்சரித்துள்ளது. மேலும், அப்பகுதியில் அடுத்த சில நாட்களுக்குக் கடும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கோஷி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை தற்போது 669 ஆக உயர்ந்துள்ளது. 2,400-க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணி தீவிரமாக நடந்துவரும் நிலையில், 163 வெளிநாட்டவர் உட்பட 2,500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். நேபாள ராணுவத்தைச் சேர்ந்த 5,000 பேர் உள்பட மொத்தம் 11,000 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு மக்களும் பல்வேறு அமைப்புகளும் அளித்து வரும் நிதியுதவி மூலம் மொத்த நிதி இருப்பு 409 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

நேபாளத்தில் வெள்ளத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகளுக்கு மட்டும் தோராயமாக 47,500 கோடி ரூபாய் வரை தேவைப்படலாம் என அந்நாட்டு நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே தெரிவித்துள்ளார்.