ரேஷன் கடை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வுடன் புதிய சலுகைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடை (ரேஷன் கடை) பணியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு 15 சதவீத ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஊதிய விகிதம் 2026 மார்ச் 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வருகிறது. இது குறித்து உணவு மற்றும் கூட்டுறவுத்துறைச் செயலர் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, கடந்த 2021-ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பணியில் சேர்ந்து ஓராண்டு முடித்த ஊழியர்களுக்கு, விற்பனையாளர்கள் - ரூ. 9,900 முதல் ரூ. 39,600 வரை (காலமுறை ஊதியம்). கட்டுநர்கள்: ரூ. 9,000 முதல் ரூ. 35,000 வரை (காலமுறை ஊதியம்) வழங்கப்படும்.. தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்துடன் 15 சதவீதத்தைக் கூடுதலாகச் சேர்த்து, அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கிப் புதிய அடிப்படை ஊதியம் கணக்கிடப்படும். ஊதிய உயர்வுடன் சேர்த்து பல்வேறு படிகளையும் அரசு உயர்த்தி வழங்கியுள்ளது:
புதிய அடிப்படை ஊதியத்தில் 55% அகவிலைப்படி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும் அகவிலைப்படி உயர்வும் இவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடைமுறையில் உள்ள 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியில் விற்பனையாளர்களுக்கு ரூ. 1,500; கட்டுநர்களுக்கு ரூ. 1,200. இதர பகுதிகளில் விற்பனையாளர்களுக்கு ரூ. 1,200; கட்டுநர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பணிபுரிவோருக்கு அடிப்படை ஊதியத்தில் 5% அல்லது அதிகபட்சம் ரூ. 700 வரை வழங்கப்படவுள்ளது. புதிதாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்குப் பணியில் சேர்ந்த முதல் ஓராண்டு வரை 'தொகுப்பூதியம்' வழங்கப்படும்: விற்பனையாளர்கள்: ரூ. 7,500 (மாதம்). கட்டுநர்கள்: ரூ. 6,600 (மாதம்). ஓராண்டு நிறைவடைந்த பிறகு இவர்கள் மேலே குறிப்பிட்ட காலமுறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்படுவார்கள்.
இந்த அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 25,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடை பணியாளர்கள் பயன்பெறுவார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வழங்கப்பட்டுள்ள இந்த ஊதிய உயர்வு, ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.