நாடாளுமன்றத்தில் புதிய மசோதா.. இனி வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் சிறை தண்டனை நிச்சயம்!

 

தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணையான சட்டப்பூர்வ அந்தஸ்தைத் தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலுக்கும் வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒரு புதிய சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வரவுள்ள 'தேசிய கௌரவ பாதுகாப்பு (திருத்த) மசோதா, 2026' மூலம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றம் செய்யப்பட உள்ளது. தற்போதைய சட்டப்படி தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிப்பதே குற்றமாகக் கருதப்படும் நிலையில், இந்த புதிய திருத்தத்தின் மூலம் 'வந்தே மாதரம்' பாடலும் அந்தச் சட்டப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

இந்த புதிய சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், வந்தே மாதரம் பாடலைத் திட்டமிட்டு அவமதிப்பது, அதற்குத் தடை ஏற்படுத்துவது அல்லது இழிவுபடுத்துவது ஆகியவை சட்டப்படி கடுமையான மற்றும் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாற்றப்படும். தவறு செய்பவர்களுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை வழங்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியப் பங்காற்றிய வந்தே மாதரம் பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான அந்தஸ்தும், சட்டப் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து நீண்ட நாட்களாகக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.

தற்போது மத்திய அரசு கொண்டு வரும் இந்த அதிரடி மசோதா, தேசிய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.