மதுரை, சிவகங்கை மாவட்டங்களுக்குப் புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழகத்தில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில், முக்கியமான தென் மாவட்டங்களான மதுரை மற்றும் சிவகங்கையின் மாவட்ட ஆட்சித் தலைவர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த புதிய உத்தரவின்படி, இரு மாவட்டங்களுக்கும் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் பொறுப்பேற்கவுள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக பி. ஆகாஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக இவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவராகப் பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மதுரையின் ஆட்சியராக இருந்த கே.ஜே. பிரவீன் குமார் ஐஏஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தின் புதிய நிர்வாகத் தலைவராக பி. ஆகாஷ் பொறுப்பேற்கவுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தின் புதிய ஆட்சித் தலைவராக நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2018-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பாக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகத்தனது சிறப்பான சேவையை வழங்கி வந்தார்.
தற்போது சிவகங்கை ஆட்சியராக இருந்த கே. பொற்கொடி ஐஏஎஸ், சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, சிவகங்கையின் புதிய ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா பொறுப்பேற்றுக்கொண்டு, மாவட்டத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காணவும், அரசின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதரையும் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.