அரசு ஊழியர்கள் பொதுமாறுதல் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் இயக்குநரகங்கள், மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத (அமைச்சுப்) பணியாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தும் வகையில், தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை (அரசாணை நிலை எண். 190) வெளியிட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு எவ்விதப் புகார்களுக்கும் இடமின்றி முழுமையாக எமிஸ் இணையதளம் வாயிலாக மட்டுமே நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மட்டுமே பொதுமாறுதல் வழங்கப்படும் என அரசாணையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே அலுவலகம் அல்லது ஒரே பணியிடத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியரல்லாத பணியாளர்களுக்குக் கட்டாயப் பணியிட மாறுதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயப் பணியிட மாறுதல் விதியிலிருந்து குரூப் 'டி' பணியாளர்கள், ஓட்டுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், 100 சதவீதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பணியாளர்கள், ஓராண்டிற்குள் பணி ஓய்வு பெறவுள்ள பணியாளர்கள் ஆகியவர்களுக்குச் சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
தீவிர மருத்துவக் காரணங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவன் - மனைவி அரசுப் பணி முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்குக் கலந்தாய்வில் உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகப் பணியாளர்களின் பணி விவரங்களை எமிஸ் இணையதளத்தில் துல்லியமாகப் பதிவேற்றிச் சரிபார்க்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.