வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி -  சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் ஏற்படும் இந்த புதிய வானிலை மாற்றம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழைக்குச் சாதகமானச் சூழல் நிலவுகிறது.

சென்னையின் ஒருசில பகுதிகள் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று பகல் பொழுதில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 36 டிகிரி செல்சிஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சிஸ் வரையிலும் பதிவாக வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைவதைப் பொறுத்து, தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழையின் வேகம் அதிகரிக்கக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை பெய்யும் சமயங்களில் மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்குச் செல்லும்போது போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், பலத்த காற்று வீசும் நேரங்களில் மரங்களின் அடியிலோ அல்லது பலவீனமான தற்காலிகக் கூரைகளின் கீழோ நிற்பதைத் தவிர்க்குமாறும் வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.