வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் நவம்பர் 30-ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 30-ஆம் தேதி வாக்கில் தெற்கு அந்தமான் - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்தடுத்த நாட்களில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு குறைவாக உள்ளதாகத் தற்போது கணிக்கப்பட்டுள்ளது. எனினும், முன்பு உருவான 'அக்வான்' புயலும் தொடக்கத்தில் சாதாரண காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகக் கணிக்கப்பட்டுப் பின்னர் புயலாக வலுப்பெற்றதால், இனி வரும் நாட்களில் நிகழும் வானிலை மாற்றங்களைக் கொண்டே இதன் நகர்வும் தீவிரமும் துல்லியமாகத் தெரியவரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய வானிலை அமைப்புகளின்படி, இன்று நவம்பர் 27ம் தேதி தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நவம்பர் 28ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், டெல்டா மாவட்டங்கள் (தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்), புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியபோது இயல்பை விட அதிக மழை பதிவானது. ஆனால், வழக்கமாக 18 செ.மீ. மழை பதிவாக வேண்டிய நவம்பர் மாதத்தில், இதுவரை 10 செ.மீ. அளவு கூட மழை பதிவாகவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
போதிய மழையின்றி அணைகளின் நீர்மட்டமும் எதிர்பார்த்த அளவு உயராத நிலையில், நிலத்தை உழுதுவிட்டு மழைக்காகக் காத்திருக்கும் விவசாயிகளுக்குப் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குறித்த அறிவிப்பு நம்பிக்கையை அளித்துள்ளது.