undefined

புதிய கட்சிக் கொடி.. அதிமுக பாணியில் சசிகலாவின் 'மாஸ்டர் பிளான்'!

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளான இன்று தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில், சசிகலா தலைமையில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிமுகவில் இணைய எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சசிகலா தற்போது தனது அடுத்தகட்ட அதிரடி நகர்வை எடுத்துள்ளார்.

மாநாட்டுத் திடலில் சசிகலாவின் ஆதரவாளர்கள் வரிசையாகக் கட்டியுள்ள புதிய கொடிகள் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இந்தக் கொடி அதிமுகவின் பாரம்பரிய வண்ணங்களான கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியில் அண்ணா மற்றும் ஜெயலலிதாவின் உருவங்கள் இருக்கும். ஆனால், சசிகலா அறிமுகப்படுத்தியுள்ள இந்தப் புதிய கொடியில் அந்த உருவங்கள் இடம்பெறவில்லை.

மாநாட்டுப் பந்தலில் உள்ள பேனர்களில் "களம் காண்போம்.. அம்மாவின் ஆட்சி அமைப்போம்" என்ற வாசகங்கள் அதிரடியாக இடம்பெற்றுள்ளன. இது அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதை உறுதிப்படுத்தும் விதமாக இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளைச் சசிகலா வழங்க உள்ளார். ஆனால், அதைவிட முக்கியமாக இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் சுமார் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிடக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.'

"இன்று ஒரு நல்ல செய்தி வரும்" எனச் செய்தியாளர்களிடம் சசிகலா காலையிலேயே சூசகமாகத் தெரிவித்திருந்தது, இந்தப் புதிய கட்சி அறிவிப்பைத்தான் என்று அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதிமுக மற்றும் டிடிவி தினகரன் தரப்பில் ஏற்கனவே கூட்டணிகள் மற்றும் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், சசிகலாவின் இந்தத் தனிக்கட்சி முயற்சி வாக்குகளைப் பிரிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக வாக்கு வங்கியைச் சசிகலாவின் இந்தப் புதிய நகர்வு கடுமையாகப் பாதிக்கும் என அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, அதிமுக தலைமைக்கு ஒரு நேரடிச் சவாலாகவே கருதப்படுகிறது. சசிகலாவின் இந்தப் புதிய பயணத்தால் தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்களை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.