சபரிமலை சீசனுக்குப் புதிய ஏற்பாடுகள்... ஏஐ தொழில்நுட்பத்தில் கூட்ட நெரிசல் கட்டுப்பாடு!

 

உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல மகரவிளக்கு பெருவிழா சீசனை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையைச் சீரமைக்கவும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் தற்பொழுது தீவிரப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு மண்டல பூஜை சீசனின் போது வரலாறு காணாத கூட்ட நெரிசல் ஏற்பட்டதால், பக்தர்கள் நீண்ட தூரம் காத்துக்கிடக்க நேரிட்டதுடன் பலதரப்பட்ட நிர்வாகக் குறைபாடுகளும் விமரிசனத்திற்கு உள்ளாகின.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு கடந்த காலத் தவறுகள் எதுவும் மீண்டும் அரங்கேறாத வண்ணம் விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பம்பை முதல் சந்நிதானம் வரை குடிநீர், தங்குமிடம் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படைத் தேவைகளையும் முன்கூட்டியே தரமாகத் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சபரிமலையில் கூட்ட நெரிசலைத் துல்லியமாகக் கண்காணித்துக் கட்டுப்படுத்த, முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

சந்நிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பதினெட்டாம் படி ஆகிய முக்கியப் பகுதிகளில் ஏ.ஐ. கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்படும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிமிடத்தில் எவ்வளவு பக்தர்கள் கூடுகிறார்கள், எங்கு நெரிசல் அதிகமாகிறது என்பதைத் தேவஸ்வம் போர்டு மற்றும் காவல் துறையினர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நொடிக்கு நொடி கண்காணிக்க முடியும். நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே பக்தர்களின் வருகையைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பாதைகளில் அனுப்ப இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.

ஆன்லைன் முன்பதிவு முறை மேலும் முறைப்படுத்தப்பட்டு, சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் எவ்வித சிரமமும் இன்றி ஐயப்பனின் தரிசனம் கிடைப்பது முழுமையாக உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும் பகுதியினர் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், மண்டல பூஜை சீசன் தொடங்குவதற்கு முன்பாகத் தென் மாநில முதலமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தில், பக்தர்களுக்கான சிறப்புப் பேருந்து வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு குறித்த விழிப்புணர்வை அந்தந்த மாநிலங்களில் ஏற்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.