புதிய வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசு சான்றிதழ்... மத்திய அரசு அதிரடி!
வாகனங்களுக்கான மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUC) பெறுவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இதற்காக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் திருத்தம் செய்யப்பட்டு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, 6 ஆண்டுகள் வரை பழமையான பி.எஸ்.-6 தரத்திலான தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றால் போதும்.
புதிய விதிகளின்படி சான்றிதழ் செல்லுபடியாகும் காலம்:
-
பி.எஸ்.-1, பி.எஸ்.-2, பி.எஸ்.-3 வாகனங்கள் - 3 மாதங்கள்.
-
பி.எஸ்.-4 வாகனங்கள் - 6 மாதங்கள்.
-
6 ஆண்டுகள் வரையிலான பி.எஸ்.-6 தனியார் வாகனங்கள் - 3 ஆண்டுகள்.
-
6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான பி.எஸ்.-6 தனியார் வாகனங்கள் - 1 ஆண்டு.
-
10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பி.எஸ்.-6 தனியார் வாகனங்கள் - 6 மாதங்கள்.
டாக்சி, பேருந்து, லாரி உள்ளிட்ட பி.எஸ்.-6 வணிக வாகனங்களுக்கு 6 ஆண்டுகள் வரை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சான்றிதழ் பெற வேண்டும். 6 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறையும், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் புதுப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட சான்றிதழ்களின் கால அவகாசம் தானாக நீட்டிக்கப்படாது. அவை காலாவதியான பிறகு முதல் முறையாக புதுப்பிக்கும்போதுதான் புதிய விதிமுறைகள் பொருந்தும்.