தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி!

 

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தினருக்கு, வட்டாட்சியர் அலுவலகங்களில் அதிகாரிகள் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் மனு நிராகரிப்புகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ்பவர்கள், தங்களுக்குத் திருமணமான பின்பு தனிக் குடித்தனம் செல்லும் போது புதிய ரேஷன் கார்டு பெறுவது வழக்கமான ஒரு நடைமுறை. இதற்குத் தங்களின் பழைய குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கியதற்கான 'பெயர் நீக்கல் சான்றிதழ்'  மிக அவசியமாகும்.

ஆனால், தற்போது வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு புதிய நிர்வாகச் சிக்கல் முளைத்துள்ளது. குறிப்பாக, ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கும் குடும்பத்தில், அவருக்குத் திருமணமாகி அவர் தனது மனைவியுடன் தனியாகப் புதிய ரேஷன் கார்டு பெற முயன்றால், அதற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தற்போதைய விதிகளின்படி, தாயின் கார்டில் இருந்து அந்த ஒரே மகனின் பெயரை நீக்க வட்டாட்சியர் அலுவலகங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, அவர்களின் மனுக்கள் அடியோடு நிராகரிக்கப்படுகின்றன.

"ஒரே மகன் இருந்தால் அவர் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும், அதனால் கார்டைப் பிரிக்க முடியாது" என்ற ரீதியில் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவுகளைக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்வதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், நடைமுறையில் வேலைவாய்ப்பு, இடநெருக்கடி போன்ற காரணங்களால் தனியாகக் குடித்தனம் செல்லும் ஏழை, எளிய நடுத்தரக் குடும்பங்கள், இந்த விதியால் தங்களுக்குரிய அத்தியாவசிய ரேஷன் பொருள்களைப் பெற முடியாமல் பல ஆண்டுகளாகக் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வட்ட வழங்கல் அலுவலகங்களில்  நிலவி வரும் இந்த நீண்ட கால நடைமுறைச் சிக்கலால், புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான இளம் தம்பதியினர் வட்டாட்சியர் அலுவலகங்களை நோக்கி அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த விசித்திரமான விதிமுறைக்குத் தமிழக அரசு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைத்து, உரிய தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.