நாடு முழுவதும் செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சை மையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் - மத்திய அரசு அதிரடி!
இந்தியாவில் செயல்பட்டு வரும் செயற்கை கருத்தரிப்பு மற்றும் உதவி இனப்பெருக்க சிகிச்சை மையங்களை முறைப்படுத்தவும், உரிமம் இல்லாத போலி மையங்களின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கவும் மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக முறையான உரிமம் பெறாத போலி மையங்கள் மற்றும் கருவுறுப்பு மாற்ற முறைகேடுகள் குறித்துப் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தேசிய ஆர்ட் மற்றும் வாடகைத்தாய் பதிவகத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை மொத்தம் 7,803 மையங்கள் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்களை விரிவாக ஆய்வு செய்ததில், விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 4,268 மையங்களுக்கு மட்டுமே இதுவரை அரசிடம் இருந்து முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மையங்கள் தகுந்த உரிமமின்றி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது.
போலி மையங்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவப் பொருட்களை வாங்குவதைத் தடுத்து, அவற்றை முற்றிலும் முடக்கும் நோக்கில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
செயற்கை கருத்தரிப்பு மையங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆய்வகப் பொருட்கள் மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்களை, அரசு அங்கீகாரம் பெற்று முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிகிச்சை மையங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பொருட்களைத் தயாரிப்பவர்களும், வினியோகம் செய்பவர்களும் தாங்கள் விநியோகம் செய்யும் கருத்தரிப்பு மையம் அரசிடம் முறையாகப் பதிவு பெற்றுள்ளதா என்பதை இணையதளம் மூலம் சரிபார்ப்பது தற்பொழுது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான புதிய கட்டுப்பாட்டின் மூலம், செயற்கை கருத்தரிப்புக்குத் தேவைப்படும் மிக முக்கியமான அத்தியாவசியப் பொருட்களின் கள்ளச்சந்தை புழக்கம் முற்றிலுமாகத் தடுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, செயற்கை கருத்தரிப்புக்குத் தேவைப்படும் விந்தணு, முட்டை மற்றும் கருவை ஆய்வகத்தில் வளர்க்கப் பயன்படுத்தப்படும் சிறப்பு ரசாயனங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இனி அங்கீகாரம் இல்லாத போலி மையங்களுக்குக் கிடைக்காது. தேவையான மருத்துவப் பொருட்களை வாங்க முடியாமல் போலி மையங்கள் தானாகவே முடங்கும் நிலை ஏற்படும் என்பதால், குழந்தைப்பேறுக்காகச் செல்லும் தம்பதியர் ஏமாற்றப்படுவதும், அவர்களது ஆரோக்கியம் பாதிக்கப்படுவதும் முழுமையாகத் தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த புதிய மருத்துவத் தரக்கட்டுப்பாட்டு விதிகள் நாடு முழுவதும் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும், சட்டவிரோதமாகச் செயல்படும் போலி கருத்தரிப்பு மையங்களைக் கண்டறிந்து சீல் வைக்கவும் அந்தந்த மாநிலச் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து உள்ளூர் போலீசார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் சோதனைகளைத் தொடங்கியுள்ளனர். விதிமீறலில் ஈடுபடும் மையங்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் கைது செய்யப் போலீசார் தகுந்த சட்ட நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.