பணம் கொண்டு செல்லும் வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்தின் ‘கியூஆர் கோடு’ அஸ்திரம் - கருப்புப் பணத்திற்கு செக்!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கணக்கில் வராத பணப் புழக்கத்தைத் தடுக்க இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், வங்கப் பணத்தைக் கொண்டு செல்லும் அனைத்து வாகனங்களிலும் இனி 'கியூஆர் கோடு' இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பறிமுதல் மேலாண்மை அமைப்பின் மூலம் இந்த கியூஆர் கோடு உருவாக்கப்படும்.
பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இந்த கோடை ஸ்கேன் செய்தாலே போதும்; அந்தப் பணம் எந்த வங்கிக் கிளையிலிருந்து கொண்டு வரப்படுகிறது, எவ்வளவு தொகை, எங்கே கொண்டு செல்லப்படுகிறது, வாகன எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உடனே தெரிந்துவிடும்.
வழக்கமாகத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஆனால், இந்த முறை அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க, தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே இந்த நடைமுறையை ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
QR Code இல்லாத வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பணம் ‘சந்தேகத்திற்குரியது’ எனக் கருதப்பட்டு உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். தேர்தல் காலத்தில் சூரியன் மறைந்த பிறகு (மாலைக்கு மேல்) பண வாகனங்கள் செல்லக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மதுபானம், பரிசுப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் கடத்தப்படுவதைத் தடுக்க இந்த ESMS தளம் முழுமையாகப் பயன்படுத்தப்படும்.