பிறப்பு, இறப்பு சான்றிதழில் புதிய விதிகள்... மத்திய அரசு சட்டத்தில் திருத்தம்!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் துல்லியமாகவும் மாற்றும் வகையில், மத்திய அரசு முக்கிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இனி ஒரு குழந்தையின் பிறப்பை 2 ஆண்டுகளுக்குள் முறைப்படி பதிவு செய்யத் தவறினால், நேரடியாகப் பதிவு செய்ய முடியாது. 2 ஆண்டுகளுக்குப் பிந்தைய பிறப்பு பதிவுகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் (RDO) உரிய சான்றுகளுடன் முறையீடு செய்து, அவர்களின் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகே பதிவு செய்ய இயலும்.
ஒருவரின் இறப்பைச் சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால், அதற்கான நடைமுறைகள் மேலும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 2 ஆண்டுகளுக்குப் பிறகு இறப்பைப் பதிவு செய்ய விரும்புபவர்கள், உரிய நீதித்துறை நடுவரிடம் மனுத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் முறையான உத்தரவைப் பெற்ற பின்னரே இறப்புச் சான்றிதழைப் பெற முடியும்.
பொதுமக்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்புகளைக் காலதாமதமின்றி உடனடியாகப் பதிவு செய்வதை ஊக்குவிக்கவும், போலிச் சான்றிதழ்கள் உருவாக்கப்படுவதைத் தடுக்கவுமே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.