டாஸ்மாக் பார்களுக்கு புதிய விதிமுறைகள்... தமிழக அரசு அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள பார்களை நடத்துவதற்குத் தனியாருக்கு மீண்டும் டெண்டர் மூலம் அனுமதி வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு அருகிலோ அல்லது கடையிலிருந்து அதிகபட்சம் 100 மீட்டர் சுற்றளவிற்குள்ளோ பார் அமைக்கப்பட வேண்டும். பார் அமைக்கப்படும் இடத்திற்குக் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் (சுமார் 215 சதுர அடி) பரப்பளவு இருக்க வேண்டும். மேலும், அங்கு வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சுத்தமான குடிநீர் மற்றும் கைகளைக் கழுவுவதற்கான வசதிகள் கட்டாயம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பார் அமைக்கப்படும் இடத்தை மாவட்ட அளவிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அவ்விடம் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருப்பதை உறுதி செய்த பிறகே அங்கீகாரம் வழங்கப்படும்.
டாஸ்மாக் பார்களுக்குள் 21 வயது நிரம்பாதவர்கள் நுழையவோ, மதுபானம் அருந்தவோ அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 21 வயதுக்குக் குறைவானவர்களைக் கடைகள் மற்றும் பார்களில் பணியமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்குப் பிறகு பார்களில் யாரும் இருக்கக் கூடாது. அத்துடன், திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட அரசு அறிவிக்கும் மதுபான விற்பனை இல்லாத நாட்களில் பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
டாஸ்மாக் பார்களுக்கான அனுமதி காலம் முடிவடையவுள்ள நிலையில், ஒப்பந்தப்புள்ளி நடத்தப்பட்டு அதில் அதிக தொகையை வழங்கும் தகுதியான நபர் அல்லது நிறுவனத்திற்கு பார் நடத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் நவம்பர் 29ம் தேதி முதல் அடுத்த ஓராண்டுக்கு நவம்பர் 28, 2027 வரை டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கான உரிமங்களைப் புதுப்பித்து வழங்கவும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்கவும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.