சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய விதிமுறைகள் அமல் - வாகன ஓட்டிகளுக்கான முக்கிய மாற்றங்கள்!

 

சென்னையின் முக்கியச் சாலையான ஐ.டி. காரிடார் எனப்படும் ஓ.எம்.ஆர். சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்துக் காவல்துறையின் சார்பில் சில புதிய போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் மற்றும் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அப்பகுதியில் வழக்கமாகச் செய்யும் ‘யூ-டர்ன்’ செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக, இந்த வாகனங்கள் பெருங்குடி சுங்கச்சாவடி இருந்த பகுதி வரை சென்று, அங்கு யூ-டர்ன் செய்து சோழிங்கநல்லூர் நோக்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

200 அடி ரேடியல் சாலையில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் சீவரம் அருகே யூ-டர்ன் செய்ய அனுமதி இல்லை. அந்த வாகனங்களும் பெருங்குடி சுங்கச்சாவடி இருந்த பகுதிக்குச் சென்றுதான் யூ-டர்ன் செய்து சோழிங்கநல்லூர் செல்ல வேண்டும்.

பெருங்குடி கந்தன்சாவடியில் இருந்து எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நோக்கிச் செல்லும் வாகனங்கள், உலக வர்த்தக மையம் அருகே யூ-டர்ன் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவையும் பெருங்குடி சுங்கச்சாவடி வரை சென்று யூ-டர்ன் செய்தே எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நோக்கிச் செல்ல வேண்டும்.

அதேசமயம், பெருங்குடி மற்றும் சீவரம் பகுதியில் இருந்து 200 அடி ரேடியல் சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் யூ-டர்ன் செய்து செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.எம்.ஆர். சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தினால் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைக்கும் வகையிலேயே இந்தக் புதிய மற்றும் அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் போக்குவரத்துக் காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.