தமிழகத்தின் புதிய எம்.எல்.ஏ-க்கள் இன்று பதவியேற்பு... 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடக்கம்!
17-வது தமிழகச் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ-க்களாக முறைப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கின்றனர். தற்காலிகச் சபாநாயகராகப் பொறுப்பேற்றுள்ள கருப்பையா, புதிய உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வரும் உறுப்பினர்கள், தங்களது வெற்றிச் சான்றிதழை அவசியம் கொண்டு வர வேண்டும் எனச் சட்டமன்றச் செயலகம் முன்னதாகவே உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நாளை காலை 9:30 மணிக்குச் சட்டமன்றத்தின் புதிய சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணிகளைச் சட்டமன்றச் செயலகம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் புதிய முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (மே 10) பதவியேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, சட்டமன்றத்தின் முதல் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் நிபந்தனைப்படி, வரும் மே 13-க்குள் புதிய அரசு சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிரூபிக்க வேண்டியது அவசியமாகும். அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு தொடங்கும் இந்த முதல் கூட்டத்தொடர் தமிழக அரசியலில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.