1,428 அடி உயர கட்டிடத்தில் ஏறி கெத்து காட்டிய இளம்பெண்... தட்டி தூக்கிய போலீசார்! 

 

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1,428 அடி உயரமுள்ள வானுயரக் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஏறிய 18 வயது இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓரிகான் மாநிலம் போர்ட்லேண்ட் நகரைச் சேர்ந்த விவியன் வார்னாக் என்ற அந்தப் பெண், கடந்த 16-ம் தேதி மன்ஹாட்டனில் உள்ள ஸ்டெய்ன்வே டவர் கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஏறியுள்ளார். சுமார் 91-வது மாடிக்கு அருகே அவர் ஆபத்தான முறையில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரைப் பத்திரமாக மீட்டனர். பின்னர் குற்றவியல் அத்துமீறல் குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவியன், தான் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர் என்பதால் போலீசார் கைது செய்ததாகக் கூறினார். மேலும், உயரத்திலிருந்து நியூயார்க் நகரின் அழகைக் காணவே கட்டிடத்தில் ஏறியதாகவும் விளக்கம் அளித்தார்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.