நியூசிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கிய 50 திமிங்கலங்கள்... பெரும்பாலானவை உயிரிழப்பு!
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுப் பகுதியில் சுமார் 50 திமிங்கலங்கள் கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை உயிரிழந்த நிலையில், எஞ்சியவற்றைக் காப்பாற்ற மீட்புக் குழுவினர் போராடினர்.
நியூசிலாந்தின் வடக்கு தீவின் தெற்குப் பகுதியில் உள்ள கேப் பல்லிசர் அருகே நகவாய் கடற்கரையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பாறைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியில், பைலட் வகை திமிங்கலங்கள் கூட்டமாகக் கரை ஒதுங்கியுள்ளன.
உள்ளூர் மக்கள் சுமார் 50 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதாகத் தெரிவித்துள்ளனர். நியூசிலாந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறைந்தது 20 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை உறுதிப்படுத்தினர். அவற்றில் பல காயங்களால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிருடன் இருந்த திமிங்கலங்களைக் காப்பாற்ற அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உள்ளூர் பழங்குடியினர் மற்றும் திமிங்கல மீட்பு அமைப்பான 'ப்ராஜெக்ட் ஜோனா' இணைந்து பணியாற்றினர். திமிங்கலங்களின் உடல் ஈரப்பதத்தைப் பராமரிக்க தண்ணீர் ஊற்றியும், ஈரத்துணிகளைப் பயன்படுத்தியும் தன்னார்வலர்கள் முயற்சி செய்தனர். இரண்டு திமிங்கலங்கள் மீண்டும் கடலுக்குள் செலுத்தப்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் வெளியான தகவல்களின்படி உயிர் பிழைத்திருந்த திமிங்கலங்களும் உயிரிழந்தன.