திருமணமான 11 நாட்களில் புதுமணப் பெண் தற்கொலை - ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், திருமணமாகி 11 நாட்களே ஆன நிலையில் புதுமணப் பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்தவர் அஜின் நடேசன். இவரது மனைவி ஜிஷா (29) நேற்று நண்பகல் 12 மணியளவில் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். உயிரிழந்த ஜிஷாவிற்கு இது இரண்டாவது திருமணமாகும். இவரது முதல் கணவர் சரத் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார். முதல் கணவர் மூலம் ஜிஷாவிற்கு 8 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
முதல் கணவர் இறந்த நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் கடந்த 11 நாட்களுக்கு முன்புதான் அஜின் நடேசனுடன் ஜிஷாவிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த வர்க்கலா காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் முடிந்து 11 நாட்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், வரதட்சணை கொடுமையா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறா என்ற கோணத்தில் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.