ஹனிமூன் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கிய புதுமணப்பெண் உயிரிழப்பு!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மலைப்பகுதிக்கு தேனிலவு சென்ற இடத்தில், தங்கியிருந்த ஹோம்ஸ்டே விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலத்த தீக்காயமடைந்த புதுமணப்பெண், இரண்டு மாதங்களுக்கும் மேலான தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் சோப்ரா பகுதியைச் சேர்ந்த சமீர் தாஸ் என்பவருக்கும் நிகிதா சாஹா என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு மாதங்களே ஆகியிருந்தன. திருமணத்தைத் தொடர்ந்து புதுமணத் தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் டார்ஜிலிங் மலைப்பகுதிக்குத் தேனிலவு சென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி டார்ஜிலிங்கின் சிடோங் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோம்ஸ்டே விடுதியில் அவர்கள் தங்கியிருந்தபோது, அங்கு பார்பிக்யூ சமையல் செய்தபோது எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நிகிதா சாஹா தீயில் சிக்கிப் படுகாயமடைந்தார்.
விபத்தில் பலத்த தீக்காயமடைந்த நிகிதா உடனடியாக மீட்கப்பட்டு முதலில் சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காகக் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிகிதா சாஹா, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
மகிழ்ச்சியாகத் தேனிலவுக்குச் சென்ற புதுமணப்பெண், விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், டார்ஜிலிங் உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களில் செயல்பட்டு வரும் ஹோம்ஸ்டேக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் முறையான தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா என்பதை அரசு அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும், இது குறித்த பெரும் விவாதமும் சமூக வட்டாரத்தில் எழுந்துள்ளது.