காவிரி கரையில் குவிந்த புதுமண தம்பதியினர்... தண்ணீரின்றி களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

 

தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளைப் போற்றும் ஆடிப்பெருக்குவிழா பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் விழா களையிழந்து காணப்பட்டது.

ஆடி மாதத்தில் நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதைக் கொண்டாடும் விதமாக, ஆடிப்பெருக்கு நாளன்று ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் நீராடி காவிரித் தாய்க்குப் பூஜை செய்வது வழக்கம். ஆடி 18-யை முன்னிட்டு புதுமணத் தம்பதியர் காவிரிக் கரையில் நீராடி, சிறப்புப் பூஜைகள் செய்து, தாலிக் கயிற்றை மாற்றிக் கணவரிடம் ஆசி பெற்றனர். பெண்கள் 18 நாட்கள் வீட்டில் வளர்த்த நவதானிய முளைப்பாரிகளை ஊர்வலமாகக் கொண்டு வந்து காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனர்.

பரமத்திவேலூர் பகுதியில் பஞ்சபாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடந்த 18 நாள் பாரதப் போர் முடிந்து, ஆயுதங்களைக் காவிரியில் சுத்தம் செய்த ஐதீகத்தின்படி, பொதுமக்கள் தங்கள் குலதெய்வக் கோவில் ஆயுதங்களைக் காவிரியில் கழுவி சிறப்புப் பூஜைகள் செய்தனர்.

திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்று மணலில் தலைவாழை இலையிட்டு மஞ்சள் பிள்ளையார் பிடித்து, காப்பரிசி, பழங்கள் வைத்து, காவிரி ஆற்றில் நீர் நிறைந்து செழிக்க வேண்டும் என்று பெண்கள் இறைவனை வேண்டிக் கொண்டனர். வழக்கமாக ஆடிப்பெருக்கு நாளன்று பொங்கிப் பெருகி வரும் காவிரியில், இந்த ஆண்டு நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது. ஆற்றில் ஆங்காங்கே தேங்கிப் பயன்பாடின்றி இருந்த குறைந்த அளவிலான நீரிலேயே புதுமணத் தம்பதிகளும் பொதுமக்களும் நீராடித் தங்களது வழிபாடுகளை நிறைவேற்றினர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பரமத்திவேலூர் உள்ளிட்ட முக்கியக் காவிரி கரையோரப் பகுதிகளில் காவல் துறையினர் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.