செய்திவாசிப்பாளரை 3 மணி நேரம் அறையில் பூட்டி வைத்து பாலியல் தொல்லை... பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் பெங்களூருவில் கைது!
சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர், பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் பெங்களூருவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வேலைக்காக பி.ஆர்.சுந்தரை அணுகியபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் அநாகரிகமாக நடந்து கொண்டதாகப் பாதிக்கப்பட்ட இளம்பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
ஜூன் 29-ம் தேதி, நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகக் கூறி அலுவலகத்திற்கு வரவழைத்து, ஓர் அறையில் 3 மணி நேரம் பூட்டி வைத்து பாலியல் தொல்லை அளித்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பி.ஆர்.சுந்தரின் மனைவியிடம் கூறிய போது அவர் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, கணவருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த பி.ஆர்.சுந்தரை போலீசார் தற்போது பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பி.ஆர்.சுந்தர், "உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பலியாகி விட்டேன். காலம் தான் அனைத்து உண்மைகளையும் வெளிக் கொண்டு வரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.