அடுத்த இன்னிங்க்ஸ்... ‘தமிழ் மீட்பு இயக்கம்’ - புதிய அமைப்பைத் தொடங்கினார் பாமக நிறுவனர் ராமதாஸ்!

 

தமிழ் மொழியின் உரிமைகளையும் தமிழர் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க.) நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ், ‘தமிழ் மீட்பு இயக்கம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். “தமிழர் பண்பாட்டையும், தமிழ் மொழியையும் மீட்க நாம் தொடர்ந்து போராட வேண்டும்” என வலியுறுத்தி அவர் இன்று விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதிய இயக்கத்தைத் தொடங்கியதற்கான காரணம் குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்ற முழக்கம் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. தமிழில் உரையாடும்போதுகூட ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பு அதிகரித்து வருகிறது; சிற்றூர்கள் வரை இந்தப் போக்கு பரவியுள்ளது. கல்வி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடைவீதிகளின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பல அரசாணைகளும் நீதிமன்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்ட போதிலும், அவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் மொழியின் உரிமைகளுக்காகப் பல்வேறு தரப்பினரும் போராடி வந்தாலும் எதிர்பார்த்த அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய்த்தமிழ் மொழியை மீட்டெடுத்து, தமிழர்களின் அன்றாட வாழ்வில் முழுமையான பயன்பாட்டு மொழியாக மாற்றுவதே புதிய இயக்கத்தின் தலையாய நோக்கம் என்று தெரிவித்துள்ள ராமதாஸ், தமிழர்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறுபாடுகளையும் கடந்து தாய்மொழியின் உரிமைகளை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த புதிய இயக்கம் தொடர்பாகக் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டத்தில், புதுவை சிவம் அவர்களின் மகள் பாவலர் பூங்கொடி பராங்குசம், தமிழறிஞர் புதுவை சிவ. இளங்கோ, பண்பாட்டியல் ஆய்வாளர் இரா. சிங்காரவேலு, பாவலர் செயபாஸ்கரன், தமிழியக்கச் செயற்பாட்டாளர் அருள் செல்வன், ஊடகவியலாளரும் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் ஏகா. ராஜசேகர், கல்வியாளர் கலை செழியன், பாவலர் தமிழமுதன், பாவலர் வைரபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றுத் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.

இந்த இயக்கத்தின் அடுத்தகட்டச் செயல்பாடுகள் குறித்தும், கூடுதலான தமிழ் ஆளுமைகளை இணைப்பது குறித்தும் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு இயக்கத்தின் அடுத்தகட்டப் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.