பாரம்பரிய இசை, ஆடல், பாடல் என அமர்க்களம்… நீலகிரியில் களைகட்டிய ஹெத்தையம்மன் திருவிழா!
நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா பாரம்பரிய சடங்குகள், ஆடல், பாடல்களுடன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மனை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ம் தேதி தொடங்கி, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
விழாவையொட்டி படுகர் இன மக்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி கோத்தகிரி அருகே உள்ள பேரகணி, குன்னூர் அருகே உள்ள ஜெகதளா உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஹெத்தையம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, ஆண்களும் பெண்களும் பாரம்பரிய வெண்ணிற ஆடைகளை அணிந்து கோவில்களில் திரண்டனர். பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, கலாசார நடனமாடியும் பாடல்களைப் பாடியும் அம்மனை வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட படுகர் கிராமங்களில் அந்தந்தப் பகுதி வழக்கப்படி அடுத்தடுத்த வாரங்களிலும் திருவிழா நடைபெற உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களில் வசிக்கும் படுகர் இன மக்களும் இதில் பங்கேற்று வருகின்றனர்.