காஞ்சி காமாட்சியம்மனை தரிசித்த நிர்மலா சீதாராமன் "வாங்கும் கடனில் சொத்துக்களை உருவாக்க வேண்டும்" எனத் தமிழக அரசுக்கு அறிவுரை!

 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து, புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மாநில அரசின் கடன் மேலாண்மை குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு வழிபாட்டிற்காக வந்திருந்த காஞ்சி சங்கராச்சாரியார்களான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோருடன் இணைந்து காமாட்சி அம்மனை வழிபட்டார்.

ஆதிசங்கர பீடத்திற்கு நிதியமைச்சர் சென்றபோது, கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்குப் பழங்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சார்பில் சங்கராச்சாரியார்களுக்குச் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற சால்வைகளை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சுவாமிகளுக்குத் தீப ஆராதனை காட்டப்பட்டது.

கோயில் தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்துப் பேசுகையில், "மத்திய அரசுடன் ஒரு கூட்டுறவு முறையில் செயல்படப் போவதாகத் தமிழக அரசு கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனெனில், எந்தவொரு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ பாகுபாடு காட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லை."

"தற்போதைய சூழலில் மட்டுமன்றி, இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்திலும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து நிதி உதவிகளும் மத்திய அரசால் முறையாக வழங்கப்பட்டன. தூத்துக்குடி போன்ற இடங்களில் பெரிய திட்டங்கள் உள்ளிட்ட பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். தற்போதும் தமிழகத்திற்குச் சேர வேண்டிய அனைத்து நிதியும், அவர்களுக்குரிய உரிமையுடன் கட்டாயமாக வழங்கப்படும்" என்றார்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தற்போதைய முதல்வர் முன்னாள் முதல்வரைக் குட்டிக்கதை மூலம் விமர்சித்தது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், "அரசியல் விமர்சனங்களைச் சட்டமன்றத்தில் செய்யாமல் வேறெங்கு செய்ய முடியும்? இதில் தவறு எதுவும் இல்லை. ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்கு எதிர்க்கட்சியும் தாராளமாகப் பதில் சொல்லட்டும், விவாதிக்கட்டும்" என்று குறிப்பிட்டார்.

மாநில அரசுகளின் அதிகரித்து வரும் கடன் சுமை குறித்த கேள்விக்கு, நிதியியல் கோட்பாடுகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கமளித்தார். "நாம் கடன் வாங்குகிறோம் என்றால், அதன் மூலம் அடுத்த 50 முதல் 60 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அல்லது தொழில் நுட்ப வளர்ச்சிக்கான பெரிய நிறுவனங்கள் போன்ற பொதுச் சொத்துகளை உருவாக்க வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும், தொழில் வளர்ச்சியும், போக்குவரத்து வசதிகளும் பெருகிப் பொருளாதாரம் தானாக வளரும். இதனால்தான் பிரதமர் அவர்கள் சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை உருவாக்கி மூலதனச் செலவிற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்."

"இதை விடுத்து, சொத்துக்களை உருவாக்காமல் வெறும் வருவாய் செலவினங்களை மட்டும், அதாவது மக்களிடம் பணத்தைக் கொடுப்பது, ஊதியத்தை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை மட்டுமே செய்யக் கூடாது. இத்தகைய நடவடிக்கைகளைச் செய்ய வேண்டாம் என்று நான் கூறவில்லை; தாராளமாகச் செய்யுங்கள். ஆனால், நிதி வசதி குறைவாக இருக்கும் போது, வாங்கும் கடனைக் கொண்டு எதிர்காலப் பயன்பாட்டிற்கான நல்ல சொத்துக்களை அமைப்பதே புத்திசாலித்தனம்" என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினார்.