CBSE போர்ட்டலில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்த 19 வயது இந்தியர்! அமெரிக்க நீதித்துறை Hall of Fame-ல் இடம்!

 

 

இந்தியாவைச் சேர்ந்த 19 வயது சைபர் பாதுகாப்பு ஆய்வாளர் நிசர்கா அதிகரி, அமெரிக்க நீதித்துறையின் (US Department of Justice) சைபர் பாதுகாப்பு அங்கீகாரப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.CBSE-யின் On-Screen Marking (OSM) போர்ட்டலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி கவனம் பெற்ற நிசர்கா, தற்போது அமெரிக்க நீதித்துறையின் அரசு அமைப்பில் கண்டறிந்த பாதுகாப்பு குறைபாட்டை பொறுப்புடன் தெரிவித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

நிசர்கா தனது சமூக வலைதளப் பதிவில், “US DoJ Hall of Fame-ல் சேர்க்கப்பட்டுள்ளேன்” என தெரிவித்து, அந்த அமைப்பின் acknowledgement பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பட்டியலில் அரசு அமைப்புகளில் கண்டறியப்படும் பாதுகாப்பு குறைபாடுகளை பொறுப்புடன் தெரிவிக்கும் சைபர் ஆய்வாளர்களின் பெயர்கள் இடம்பெறுகின்றன.

Got added to US DoJ (Department of Justice) Hall of Fame pic.twitter.com/bDIFL5SoY9

— nisarga (@ni5arga) September 22, 2026

அமெரிக்க நீதித்துறையின் ஒரு முக்கிய சட்ட அமலாக்க அமைப்பில் “critical vulnerability” ஒன்றை கண்டறிந்ததாக நிசர்கா தெரிவித்துள்ளார். அந்த குறைபாடு குறித்து அமெரிக்க நீதித்துறைக்கு தகவல் அளித்த சுமார் ஒரு வாரத்துக்குள் அது சரிசெய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் தனது பெயர் அங்கீகாரப் பட்டியலில் இடம்பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த பாதுகாப்பு குறைபாடு எந்த குறிப்பிட்ட அமைப்பில் இருந்தது என்பது குறித்து அவர் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.

இதற்கு முன்பாக, CBSE-யின் OSM போர்ட்டலில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக நிசர்கா தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் CERT-In-க்கு தகவல் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் CBSE தரப்பில், சில பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிசர்காவுக்கு சைபர் பாதுகாப்பு மீதான ஆர்வம் சுமார் 13 வயதில் தொடங்கியதாக அவர் முன்பு தெரிவித்திருந்தார். தற்போது அவர் ஐஐடி கான்பூரின் C3iHub அமைப்பில் Open-Source Intelligence (OSINT) மற்றும் Threat Intelligence Engineer ஆக பணியாற்றி வருகிறார்.சைபர் பாதுகாப்பு துறையில் இளம் வயதிலேயே அரசு அமைப்புகளின் பாதுகாப்பு குறைபாடுகளை பொறுப்புடன் சுட்டிக்காட்டி வரும் நிசர்கா அதிகரியின் பயணம் தற்போது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.