தேசியக் கொடியுடன் 3 மணி 29 நிமிடங்கள் நீரில் மிதந்து அசத்திய கல்லூரி மாணவி நித்யபாரதி!
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கல்லூரி மாணவி நித்யபாரதி, கையில் தேசியக் கொடியைப் பிடித்தபடி 3 மணி நேரம் 29 நிமிடங்கள் நீரில் மிதந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராமன் என்பவரின் மகள் நித்யபாரதி (18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் ரோபோடிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளிப் பருவத்திலிருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், தண்ணீரில் கால்களை அசைக்காமல் தலையில் கை வைத்தபடி 1 மணி நேரம் 3 நிமிடங்கள் மிதந்து கின்னஸ் சாதனை அமைப்பின் விருதை (நவம்பர் 9, 2025) பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில், கையில் மூவர்ணத் தேசியக் கொடியை ஏந்தியவாறு காலை 8:00 மணி முதல் 11:29 மணி வரை (மொத்தம் 3 மணி 29 நிமிடங்கள்) நீரில் மல்லாந்த நிலையில் மிதந்து அசத்தினார். மிதவை நீச்சலில் உலகளாவிய கின்னஸ் சாதனைகளைப் படைப்பதே தனது முதன்மை இலக்கு என்றும், அதற்காகத் தொடர்ந்து தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் நித்யபாரதி தெரிவித்தார். தேசிய உணர்வையும் விளையாட்டுத் திறமையையும் வெளிப்படுத்திய மாணவி நித்யபாரதியின் இந்தச் சாதனையைப் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.