தனியார் பைக், ஸ்கூட்டர்களில் Rapido, Uber, Ola சேவை செய்ய அனுமதி? நிதின் கட்காரி வலியுறுத்தல்! 

 

 

தனிநபர்கள் பயன்படுத்தும் சொந்த பைக் மற்றும் ஸ்கூட்டர்களை Rapido, Uber, Ola போன்ற செயலிகள் மூலம் வாடகை பயண சேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 'RIDE – Moving India Forward' நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசு கடந்த 2025-ம் ஆண்டு வெளியிட்ட மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களை மாநிலங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த வழிகாட்டுதல்களின்படி, தனியார் பயன்பாட்டுக்கான வணிகப் பதிவு செய்யப்படாத இருசக்கர வாகனங்களை பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்த மாநில அரசுகள் அனுமதி அளிக்கலாம். இதற்காக மாநில போக்குவரத்து ஆணையர்களைத் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளதாகவும், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கட்காரி தெரிவித்தார்.

 

தற்போது ராஜஸ்தான் மாநிலம் மட்டுமே இந்த வழிகாட்டுதல்களை முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அரியானா, உத்தரபிரதேச மாநிலங்கள் பகுதியளவில் அமல்படுத்தியுள்ளன.அனைத்து மாநிலங்களும் அனுமதி அளித்து, 15 முதல் 20 கோடி பேருக்கு இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தால், பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.