ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைக்கு எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது: மத்திய நிதி அமைச்சகம் திட்டவட்டம்!
ரூ.2,000 வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எத்தகைய கட்டணமும் வசூலிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகள் எப்போதும் போல எக்காலத்திலும் முற்றிலும் இலவசமாகவே தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் 0.25 சதவீதம் முதல் 0.4 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும். இந்த வணிகப் பரிவர்த்தனைக்கான கட்டணங்கள் பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்களுக்குப் பொருந்தக்கூடும் என்றாலும், இதனால் சாதாரண வாடிக்கையாளர்கள் எத்தகைய பாதிப்பையும் சந்திக்க நேராது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.