மாதம் ரூ.1 லட்சம் வரையிலான யுபிஐ ரசீதுகளுக்கு ஜிஎஸ்டி இல்லை - தேசிய பண பரிவர்த்தனைக் கழகம் விளக்கம்!
யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மீதான கட்டணங்கள் மற்றும் ஜி.எஸ்.டி. குறித்த வணிகர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்திய தேசிய பண பரிவர்த்தனைக் கழகம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது.
மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்-வணிகர் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீத வணிகர் தள்ளுபடி வீதம் அறிவிக்கப்பட்டது. நாட்டின் 96 சதவீதத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் ரூ.2 ஆயிரத்துக்கும் கீழேயே இருப்பதால், இதனால் சிறு வணிகர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது எனத் தெரிவிக்கப்பட்டது.
யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மீதான எம்.டி.ஆர். மற்றும் ஜிஎஸ்டி சுமை சிறு வணிகர்களைப் பாதிக்கும் என்ற ஊடக அறிக்கைகள் தவறானவை என என்.பி.சி.ஐ. தெளிவுபடுத்தியுள்ளது. ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எம்.டி.ஆர். கட்டணம் பூஜ்ஜியமாகவே உள்ளதால், அதற்கு ஜி.எஸ்.டி. தாக்கமும் கிடையாது.
மாதம்தோறும் ரூ.1 லட்சம் வரையிலான யு.பி.ஐ. ரசீதுகளைக் கொண்டிருக்கும் வணிகர்கள் எந்தவிதமான வணிகர் தள்ளுபடி வீதத்தையும் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் அல்ல. எனவே, அவர்களுக்கு ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகளோ அல்லது கூடுதல் சுமையோ இருக்க வாய்ப்பில்லை.
உள்ளீட்டு வரிகள் வெளியீட்டு வரிப் பொறுப்பில் இருந்து ஈடுசெய்யப்படுவது போலவே, வணிகர்கள் எம்.டி.ஆர். மீது செலுத்தும் ஜி.எஸ்.டி. தொகையானது அவர்கள் விற்கும் சரக்குகள் மீதான ஜி.எஸ்.டி.யுடன் சரிசெய்யப்படும். இதன் காரணமாக வணிகர்கள் அந்தச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தேவையற்ற அச்சங்கள் கொள்ளத் தேவையில்லை என என்.பி.சி.ஐ. அறிவித்துள்ளது.