“எத்தனை அணிகள் வந்தாலும் ஸ்டாலின் தான் சாம்பியன்” - கோவையில் உதயநிதி பேச்சு!
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த முதலிபாளையம் பகுதியில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு தேர்தல் களப்பணிகள் குறித்து உரையாற்றினார். நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கோவை தங்களின் கோட்டை என்று யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால், கோவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு மண்டலமுமே திமுகவின் கோட்டை என்பதை இந்தத் தேர்தலில் நிரூபித்துக் காட்ட வேண்டும்" என்றார். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு இளைஞர் அணி அமைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் போர் வீரர்களைப் போலச் செயல்பட வேண்டும். இளைஞர் அணியினர் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று கடந்த 5 கால திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்க வேண்டும். குறிப்பாக 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் 'காலை உணவுத் திட்டம்' போன்ற முன்னோடித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
பாஜக மற்றும் பிற எதிர்க்கட்சிகளை விமர்சித்த உதயநிதி, "இந்தச் சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக தனது பி-டீம், சி-டீம்எனப் பல அணிகளைத் தமிழ்நாட்டிற்குள் இறக்கிவிட்டுள்ளது. அவர்கள் எத்தனை அணிகளைக் கொண்டு வந்தாலும், இறுதியில் நம் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் சாம்பியனாகத் திகழ்வார்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுடன், மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.