‘இனி சுங்கச்சாவடி செல்லத் தேவையில்லை’ 'ராஜ்மார்க் யாத்ரா' செயலி மூலம் வீட்டிலிருந்தே உள்ளூர் பாஸ்!
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் உள்ளூர்வாசிகள் மாதாந்திர பாஸ் பெறுவதற்கான நடைமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மேலும் எளிமையாக்கி உள்ளது. இனி உள்ளூர்வாசிகள் சுங்கச்சாவடிகளுக்கு நேரில் செல்லாமல், வீடுகளில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் வாகன உரிமையாளர்கள் தங்களின் மாதாந்திர உள்ளூர் பாஸ்களை 'ராஜ்மார்க் யாத்ரா' என்ற அதிகாரப்பூர்வ மொபைல் செயலி வாயிலாகவே நேரடியாகப் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். இந்தச் செயலி மத்திய அரசின் டிஜிலாக்கர் மற்றும் 'வாகன்' தரவுத்தளங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரரின் முகவரி சான்று, வாகன எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்டேக் விவரங்கள் செயலி மூலமாகவே தானாகவே சரிபார்க்கப்படும். முன்னதாக உள்ளூர் பாஸ் பெற வேண்டுமெனில், சுங்கச்சாவடி அலுவலகங்களுக்கு நேரில் சென்று முகவரி சான்றுகளைச் சமர்ப்பித்துக் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் முறையின் மூலம் நேரம் மிச்சமாவதுடன், அலைச்சலும் தவிர்க்கப்பட்டுச் சில நிமிடங்களிலேயே உள்ளூர் பாஸ்களை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.