இனி நடத்துநரிடம் டிக்கெட் கிடையாது: அரசு விரைவுப் பேருந்துகளில் முழுமையான ஆன்லைன் முறை - தமிழக அரசு திட்டம்!

 

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூரப் பேருந்துகளில், இனி நடத்துநரிடம் நேரடியாகப் பயணச்சீட்டுப் பெறும் வழக்கத்தை முழுமையாகக் கைவிட்டு, நூறு சதவீதம் ஆன்லைன் முறையைக் கொண்டு வர தமிழகப் போக்குவரத்துத் துறை தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

அரசுப் பேருந்துகளின் செயல்பாடுகளைத் தற்காலத் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நவீனப்படுத்தவும், பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் பேருந்து நிலையங்களில் ஏற்படும் தேவையற்ற கூட்ட நெரிசலைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

புதிய நடைமுறையின்படி, பயணிகள் இனிமேல் பேருந்தில் ஏறிய பிறகு நடத்துநரிடம் பணம் கொடுத்துப் பயணச்சீட்டுப் பெற முடியாது. அதற்குப் பதிலாக, பின்வரும் முறைகளில் மட்டுமே பயணச்சீட்டுகளைப் பெற முடியும். டிஎன்எஸ்டிசி அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்தல், அரசுப் போக்குவரத்துத் துறையின் பிரத்யேக வாட்ஸ்அப் எண் (9444018898) மூலமாகப் பயணச்சீட்டுகளைப் பெறுதல், பல்வேறு பேருந்து நிலையங்களில் அமைந்துள்ள அரசுப் போக்குவரத்துப் கழகத்தின் அதிகாரப்பூர்வ புக்கிங் மையங்களுக்கு நேரடியாகச் சென்று முன்பதிவு செய்தல்.

தற்போது இயக்கப்படும் தொலைதூர அரசு பேருந்துகளில் பெரும்பாலான இடங்கள் ஆன்லைன் மூலமாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. எனினும், குறிப்பிட்ட சில பயணிகள் கடைசி நேரத்தில் பேருந்து நிலையங்களுக்கு வந்து, நடத்துநரிடம் நேரடியாக டிக்கெட் பெறக் காத்திருக்கின்றனர். இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பேருந்து நிலையங்களில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், பேருந்துகள் சரியான நேரத்திற்குப் புறப்படுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இனிவரும் காலங்களில் நிகழ்நேரத் தரவுகள் அடிப்படையில், காலி இடங்களின் விவரங்களைத் துல்லியமாகக் கண்காணித்துச் சேவைகளை மேம்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்த முழுமையான ஆன்லைன் முன்பதிவு முறை அமலுக்கு வரவுள்ளது. இதற்கான மென்பொருள் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் இறுதி கட்ட ஆலோசனைகள் தற்போது போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.