எவராலும் விஜய் ஆக முடியாது: நடிகர் சிபி சத்யராஜ் நெகிழ்ச்சி வாழ்த்து!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்க்குத் திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபி சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில் விஜய்யின் அரசியல் சாதனையைப் பாராட்டி மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், விஜய்க்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். "கூட்டம் ஓட்டாக மாறாது", "நடிகன் நாடாள முடியாது", "அவர் மீண்டும் நடிக்கப் போய்விடுவார்" என்று எதிர்மறையாகப் பேசியவர்களின் வாயை விஜய் தனது வெற்றியின் மூலம் அடைத்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். "விஜய் இவராக முடியாது, விஜய் அவராக முடியாது" என்று ஒப்பிட்டுப் பேசியவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, "எவராலும் விஜய் ஆக முடியாது" என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.

சினிமாவில் தனது கடின உழைப்பால் உச்சத்தை அடைந்த விஜய், இப்போது தனது தூய நோக்கத்தால் அரசியலிலும் சரித்திரம் படைத்துள்ளதாகச் சிபி சத்யராஜ் புகழாரம் சூட்டியுள்ளார். கூட்டணிகள் விஷயத்தில் விஜய் எடுத்த உறுதியான நிலைப்பாடும், பல சிரமங்களுக்கு மத்தியிலும் அவர் காட்டிய விடாமுயற்சியுமே இந்த வெற்றிக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "திரையில் நீங்கள் பலரைத் துவம்சம் செய்தபோது நாங்கள் விசில் அடித்தோம், இப்போது அதை அரசியலிலும் மெய்ப்பித்துவிட்டீர்கள்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்திற்காக அல்லாமல் உண்மைக்காக வாக்களிப்பார்கள் என்பதை விஜய் நிரூபித்துவிட்டதாகவும், தமிழ்நாட்டின் மகன் உதயமாகிறார் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.