மாணவர்கள் குஷி... தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 3 நாட்களுக்கு புத்தகப் பை கிடையாது!
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் 'மகிழ்வுடன் முன்னேறும் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள 6,279 அரசுப் பள்ளிகளுக்குத் தமிழக அரசு ரூ.1.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, நடப்பு கல்வியாண்டில் டிசம்பர் 1, ஜனவரி 12 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய மூன்று தேதிகளில் பள்ளிகளில் புத்தகப் பை இல்லாத நாட்கள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. இந்த மூன்று நாட்களிலும் மாணவர்கள் வழக்கமான பாடப் புத்தகங்களின் சுமையின்றிப் பள்ளிக்கு வரலாம். இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று நாட்களுக்குத் தலா ரூ.3,000 வீதம் நிதி வழங்கப்பட உள்ளது.
இந்தச் சிறப்பு நாட்களில் மாணவர்கள் விளையாட்டு, கலை, இலக்கியம், விநாடி-வினா, படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.