திமுகவில் 'சீட்' தரலை.. ராஜினாமா செய்துவிட்டு சுயோட்டையாக போட்டியிடும் டி.ஆர். சண்முகசுந்தரம்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்பாகி வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் திமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் ராஜினாமா செய்துவிட்டு, மேட்டுப்பாளையம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களம் இறங்கியுள்ளார்.
கோவை வடக்கு மாவட்ட திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்தவர் டி.ஆர். சண்முகசுந்தரம். இவர் நேற்று காலை திமுக தலைமைக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "குடும்பச் சூழ்நிலை மற்றும் பல்வேறு பணிச்சுமைகள் காரணமாகக் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலகுகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
ராஜினாமா கடிதம் கொடுத்த சில மணி நேரங்களிலேயே, டி.ஆர். சண்முகசுந்தரம் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடச் சுயேச்சை வேட்பாளராகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
மேட்டுப்பாளையம் தொகுதியில் தனக்குப் போட்டியிட வாய்ப்பு (சீட்) கிடைக்கும் என அவர் பெரிதும் எதிர்பார்த்திருந்தார். ஆனால், கூட்டணியிலோ அல்லது கட்சியிலோ வாய்ப்பு மறுக்கப்பட்டதால், தலைமையின் மீது கொண்ட அதிருப்தி காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேட்டுப்பாளையம் தொகுதியில் நீண்ட காலம் கட்சிப் பணியாற்றிய நிர்வாகி ஒருவர் தற்போது சுயேச்சையாகப் போட்டியிடுவது, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளரின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. இது தொகுதிக்குள் புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிருப்தியில் உள்ள மற்ற உடன்பிறப்புகளும் இவருக்கு ஆதரவளிப்பார்களோ என்ற அச்சத்தைக் கட்சித் தலைமையிடம் உருவாக்கியுள்ளது.