சாதனை... அரசு மருத்துவமனையில்   4.6 கிலோ எடையில் ஆண் குழந்தை சுகப் பிரசவம்... தாயும், சேயும் நலம்!  

 

 

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் துனி நகர அரசு மருத்துவமனையில், சீதாராம்புரத்தைச் சேர்ந்த அனிதா என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். குழந்தை பராமரிப்பு மருத்துவக்குழுவின் மேற்பார்வையில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் எடையைக் கண்டு டாக்டர்களே பிரமித்து போயினர். அந்த குழந்தை 4 கிலோ எடைக்கும் மேல் இருப்பது தெரியவந்தது.

பொதுவாக 3.5 கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலமே பிரசவிக்க முடியும் என்ற நிலையில், டாக்டர்கள் அனிதாவை சிறப்பு குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதித்து பிரசவம் பார்த்தனர். இதையடுத்து, அனிதாவிற்கு 4.615 கிலோ கிராம் எடையில் ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. சாதாரண பிரசவ எடை வரம்பை விட அதிக எடையுடன் பிறந்த இக்குழந்தைக்கு, டாக்டர்கள் 'பாலபீமன்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். முதல் முறை துனி அரசு மருத்துவமனையின் வரலாற்றிலேயே இவ்வளவு அதிக எடையுடன் ஒரு குழந்தை பிறப்பது இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

தற்போது அக்குழந்தை மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் (SNCU) டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசு மருத்துவமனையில் சுகப்பிரசவம் மூலம் இவ்வளவு அதிக எடையுடன் குழந்தை பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.