வாங்குவதற்கு மட்டுமல்ல... அள்ளிக் கொடுப்பதற்கும் சிறந்த நாள் அட்சய திருதி... செல்வம் பெருக இதைச் செய்யுங்கள்!

 

சித்திரை மாதத்து அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, 'அட்சய திருதியை' எனப் போற்றப்படுகிறது. 'அட்சயம்' என்றாலே அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். இந்த நாளில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். பலரும் இந்த நாளைத் தங்கம் வாங்குவதற்கான நாளாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், உண்மையான அட்சய திருதியை என்பது வாங்குவதை விடவும், இல்லாதவர்களுக்குக் கொடுப்பதில்தான் நிறைவடைகிறது.

அட்சய திருதியை தினத்தில் செய்யப்படும் தர்மம், நமக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் ஈடுஇணையற்ற பலன்களைத் தரும் என இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. கோடையின் உச்சத்தில் இந்த நாள் வருவதால், தாகத்தால் தவிக்கும் மக்களுக்குப் பானகம், மோர் வழங்குவது மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பது மகா புண்ணியமாகக் கருதப்படுகிறது. ஏழை எளியவர்களுக்கு வஸ்திரம், அன்னதானம் மற்றும் குடை தானம் செய்வது உங்கள் வம்சத்திற்கே நலம் சேர்க்கும்.

இந்த நாளுக்குப் பின்னால் பல புராணக் கதைகள் ஒளிந்துள்ளன. பாண்டவர்களின் பசியைப் போக்க கிருஷ்ண பரமாத்மா 'அட்சய பாத்திரம்' வழங்கிய தினம். அன்னை அன்னபூரணி அவதரித்த நன்னாள். விநாயகப் பெருமான் மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய நாள். மகாவிஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் அவதரித்த தினம். 

தங்கம் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் வருந்தத் தேவையில்லை. இந்த நாளில் தங்கம் வாங்கினால் மட்டுமே செல்வம் சேரும் என்பது கட்டாயமல்ல. வீட்டிற்குத் தேவையான மங்கலப் பொருட்கள், கல் உப்பு அல்லது புதிய தொழில் தொடங்குதல் போன்ற நற்காரியங்களைச் செய்தாலே மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

அட்சய திருதியை ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கும், லட்சுமி தேவிக்கும் மிக விருப்பமான நாள் என்பதால், இந்நாளில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது ஆன்மீக ரீதியாகச் சிறந்தது. திருமணப் பேச்சுவார்த்தைகள் மற்றும் நிச்சயதார்த்தம் செய்ய இது மிகவும் அதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது.