பிரபல எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் காலமானார்.. இலக்கியவாதிகள் இரங்கல்!

 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை மற்றும் பகடி எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42) திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிலும் வாசகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் பிரபு தர்மராஜ், நேற்று மாலை தனது இல்லத்தில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக அவருக்குத் திடீரென கடும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.

தமிழ் இலக்கியக் களத்தில் தனக்கெனத் தனித்துவமான நகைச்சுவை மற்றும் பகடி பாணி எழுத்துகளால் எண்ணற்ற வாசகர்களைக் கவர்ந்தவர் பிரபு தர்மராஜ். 'அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான்' உள்ளிட்ட இவரது பல நூல்கள் வாசகர்கள் மத்தியில் பெருமளவில் பேசப்பட்டவை ஆகும்.

எழுத்துலகம் மட்டுமன்றி, சமூக வலைதளங்களிலும் சமகால நிகழ்வுகள் குறித்தும் சமூக விஷயங்கள் குறித்தும் தனது சுவாரஸ்யமான பகடி எழுத்துகள் மூலம் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

42 வயதிலேயே எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் காலமானது தமிழ் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் அவரது வலைதள வாசகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்குப் பல்வேறு தமிழ் எழுத்தாளர்களும் வாசகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.