துறையூர், கள்ளக்குறிச்சி MLAக்களுக்கு நோட்டீஸ்... ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

 

துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.-க்களிடமும் நேரடியாக விளக்கம் கேட்டுத் தமிழக முதல்வர் விஜய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

துறையூர் மற்றும் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான புகார்கள் கட்சித் தலைமைக்குச் சென்ற நிலையில், அதனைத் தீவிரமாகக் கவனத்தில் கொண்ட முதல்வர் விஜய் உடனடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.-க்களிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே இருவருக்கும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெறும் விளக்கத்துடன் நின்றுவிடாமல், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கட்சியின் கொள்கைக்கும் கட்டுப்பாட்டிற்கும் எதிராக யார் செயல்பட்டாலும், அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் தயவு தாட்சண்யம் பார்க்கப்படாது என்பதை முதல்வர் விஜய் இதன் மூலம் திட்டவட்டமாக உணர்த்தியுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை அறிக்கையே அடுத்தகட்ட நடவடிக்கையைத் தீர்மானிக்க உள்ளது. குற்றச்சாட்டு லேசானதாக இருந்தால் கடும் எச்சரிக்கையுடன் விடப்படலாம்.

ஒருவேளை குற்றச்சாட்டு தீவிரமானதாக உறுதி செய்யப்பட்டால், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவது அல்லது நிரந்தர நீக்கம் வரை கூட நடவடிக்கை பாயலாம் எனக் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஊழலுக்கும் ஒழுங்கீனத்திற்கும் எதிராகச் சமரசமற்ற நிலைப்பாட்டில் முதல்வர் விஜய் இருப்பதால், இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.