‘இனி கலைஞர்.. ஸ்டாலின் எல்லாம் கிடையாது.. பொதுப்பெயர் தான்..’ திமுக திட்டங்களுக்கு அடுத்தடுத்து பெயர் மாற்றம் - தவெக அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முக்கிய அரசுத் திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு அடுத்தடுத்து மாற்றி அமைத்து வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்ட 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', தற்போது 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதைப் போலவே மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டத்தின் பெயரில் இடம்பெற்றிருந்த 'விடியல்' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, தற்போது 'மகளிர் பயணம்' என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சில முக்கியத் திட்டங்களின் பெயர்களை மாற்ற அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது:
இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காகக் கொண்டுவரப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், இனி 'திறன் தமிழ்நாடு' என்ற பெயருக்கு மாற்றப்படவுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டத்தை, 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' எனப் பெயர் மாற்றம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது. அரசின் இந்தத் தொடர் பெயர் மாற்ற நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளன.