தமிழகத்தில் அதிர்ச்சி - 'தாய்மாமன்' தங்க மோதிரம் தராததால் நர்ஸ் மீது மண்வெட்டியால் தாக்குதல்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, அரசுத் திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைக்குத் தங்க மோதிரம் உடனடியாக வழங்கப்படாத ஆத்திரத்தில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மதுபோதையில் நபர் ஒருவர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார்.
முழையூர் பகுதியில் அரசுத் திட்டத்தின் கீழ் பிறந்த குழந்தைகளுக்கு 'தாய்மாமன்' முறையில் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரின் குடும்பத்தினருக்குத் தங்க மோதிரம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பிறந்த தேதி முன்னுரிமை அடிப்படையில் முறைப்படி தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கிராம சுகாதார செவிலியர் அலமேலு விளக்கம் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதுபோதையில் இருந்த மதன், செவிலியர் அலமேலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மண்வெட்டியால் தாக்கிப் பலத்தக் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த உள்ளூர் போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவாக உள்ள மதனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.