மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் உயிரிழப்பு.. நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்!

 

கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே விழுந்து 22 வயது இளம் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெந்நி பகுதியில் இயங்கி வரும் தனியார் கண் மருத்துவமனையில் இச்சம்பவம் நேரிட்டுள்ளது. ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் ராஜ் என்பவரின் மகள் ஆஷிகா (22) என்ற பெண், இந்த மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் மருத்துவமனையின் மாடியிலிருந்து திடீரென கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த ஆஷிகாவிற்கு அண்மையில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. வரும் ஜனவரி 4-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த சூழலில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த காவல்துறையினர், செவிலியர் ஆஷிகாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.