புதுச்சேரியில் அதிர்ச்சி - முட்புதாரில் செவிலியர் வெட்டிக்கொலை!
புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் தனியார் மருத்துவமனை செவிலியர் மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டு முட்புதாரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஜெயஸ்ரீ, நெல்லித்தோப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் வில்லியனூர் அருகே மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டு, அங்குள்ள முட்புதர் ஒன்றிலிருந்து ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவல் அறிந்த வில்லியனூர் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், இக்கொலைக்குக் காதல் விவகாரமே காரணமாக இருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தலைமறைவாகியுள்ள மர்ம நபர்களைக் கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஜெயஸ்ரீயைக் காதலித்த நபர் யார், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு அல்லது ஒருதலைக் காதலால் இந்த விபரீதம் நிகழ்ந்ததா என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடந்து வருகிறது.