இங்க பெட் இல்ல வெளில போ, ஆள் வச்சு அடிப்பேன்...  காய்ச்சலில் துடித்த நோயாளியை மிரட்டி விரட்டியடித்த  நர்ஸ்!

 

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள அரசு மருத்துவமனையில் மனிதாபிமானமற்ற ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை கேதர் குர்ஜார் என்ற நோயாளி கடந்த 3 நாட்களாக அதிக காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரை உள்நோயாளியாக அனுமதிக்க அங்கிருந்த நர்சிங் அதிகாரி ரச்சனா சோனி என்பவர் முரட்டுத்தனமாக மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த நர்ஸ், தான் 100 பேரை வரவழைத்து உன்னை அடிக்கச் சொல்லுவேன் எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்குத் துடிக்கும் நோயாளிகளிடம் கனிவாக நடக்க வேண்டிய மருத்துவப் பணியாளரே ரவுடி போல மிரட்டல் விடுத்தது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் தற்போது தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளி தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுத் தொடர்ந்து போராடி வருகிறார். சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.