நைட் ஷிப்டால் விபரீதம்... மருத்துவருக்கு ரூ.2 கோடி பிளாக்மெயில் விடுத்த பெண் நர்ஸ் !
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் செவிலியர் ஒருவர், 65 வயது முதிய மருத்துவரைத் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இரவில் பணியாற்றி வந்த கமலா என்ற அந்தச் செவிலியர், மருத்துவரின் அந்தரங்கப் படங்களை ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். அந்தப் படங்களைக் காட்டிப் பொய் வழக்குகளில் மாட்டி விடுவதாகவும், படங்களை இணையத்தில் பரப்பி விடுவதாகவும் மிரட்டிப் பல ஆண்டுகளாகப் பணம் பறித்து வந்துள்ளார். சமூகத்தில் தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழியின்றி அந்த முதிய மருத்துவரும் கேட்ட போதெல்லாம் பணத்தை அள்ளிக் கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மருத்துவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அந்தப் பெண் இதுவரை சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைத் தன்னிடம் இருந்து பறித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனையின் வங்கிக் கணக்கில் இருந்து இணைய வழியில் மட்டும் சுமார் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் மாற்றப்பட்ட தகவலும் அம்பலமாகியுள்ளது. மேலும் பல காலியான காசோலைகள் மற்றும் முத்திரைத் தாள்களிலும் வலுக்கட்டாயமாகத் தனது கையெழுத்தைப் பெற்றுத் துன்புறுத்தியதாக அந்த மருத்துவர் கதறியுள்ளார். நற்பெயருக்கு அஞ்சி அமைதி காத்த மருத்துவர், பொறுமை இழந்து இறுதியாகக் காவல் துறையை நாடிப் புகார் அளித்துள்ளார்.
மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த செவிலியர் கமலாவைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அந்தப் பெண்ணை அதிரடியாகக் கைது செய்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவரிடம் இருந்து பறிக்கப்பட்டப் பணம் மற்றும் காசோலைகளை மீட்கும் பணிகளில் காவல் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆசை வார்த்தை கூறி 65 வயது மருத்துவரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த இந்த பகீர் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.