செல்போனால் விபரீதம்... திருமணம் நிச்சயிக்கப்பட்ட 22 வயது நர்ஸ் மருத்துவமனை மாடியில் இருந்து விழுந்து பலி!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் பகுதியில் வசித்து வருபவர் ஜெஸ்டின் ராஜ். இவரது 22 வயதான மகள் ஆஷிகா தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 7-ந் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரியில் திருமணம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல பணிக்குச் சென்ற ஆஷிகா இரவு நேரத்தில் மருத்துவமனை மாடியில் நின்று கொண்டு கைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மகள் மாடியில் இருந்து விழுந்து இறந்துவிட்டதாகச் செல்போன் மூலம் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெற்றோர்கள் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல் துறையினர் ஆஷிகாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கீழே விழுந்ததில் அவரது கைபேசியும் முற்றிலும் உடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியிருந்தது. காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அவர் கைபேசியில் பேசியபடியே கீழே விழுந்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ஆஷிகாவின் தாயார் சுதாராணி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா எனப் பல கோணங்களில் விசாரிக்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.