கோவாவில் வேலை இழந்து தவித்த பாதுகாப்பு காவலர்! சுற்றுலா சென்ற பெண் செய்த நெகிழ்ச்சி உதவி.. வைரல் வீடியோ

 

 

கோவாவுக்கு சுற்றுலா சென்ற பெங்களூரைச் சேர்ந்த பெண்ணுக்கு அங்கு அறிமுகமில்லாத ஒருவருடன் ஏற்பட்ட சந்திப்பு நெகிழ்ச்சியான சம்பவமாக மாறியுள்ளது.பெங்களூரைச் சேர்ந்த நிஸ்சிதா நரேன் அண்மையில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஒருவரிடம் அவர் சாதாரணமாக பேசியுள்ளார். அந்த உரையாடலின்போது, அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதும், தொழில் தொடங்குவதற்காக கோவாவுக்கு வந்திருந்த நிலையில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வேலை இழந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

தனது நிலை குறித்து அந்த நபர் உணர்ச்சிவசப்பட்டு நிஸ்சிதாவிடம் பேசியுள்ளார். வாழ்க்கை சில நேரங்களில் கடினமாக இருக்கும் என்று கூறிய அவர், நிஸ்சிதா தனது கோவா பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்றும், தன்னை மறந்துவிடக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நபரின் நிலையை அறிந்த நிஸ்சிதா, அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அவர் மீண்டும் மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல ரெயில் டிக்கெட் பெறுவதற்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளார். இருவரும் தங்களது தொடர்பு எண்ணையும் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை நிஸ்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “எல்லா பயணங்களும் கடற்கரைகளை ரசிப்பதற்காக மட்டுமல்ல; சில நேரங்களில் நம் பாதையில் சந்திக்கும் மனிதர்களைப் பற்றியதாகவும் மாறுகின்றன” என்ற கருத்துடன் அவர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், நிஸ்சிதா அந்த நபரிடம் பேசி அவருடைய நிலையை புரிந்துகொண்டு உதவியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், அந்த நபரின் முழுமையான பின்னணி குறித்த தகவல்கள் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை.